PS1 Movie Review


சோழ சாம்ராஜ்யத்தை சூழும் வஞ்சக இருள் விலகியதா, இல்லையா என்பதுதான் ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ படத்தின் ஒன்லைன். சோழ நாட்டில் சதி நடப்பது ஆதித்த கரிகாலனுக்கு தெரியவர, தன் நண்பன் வந்தியத்தேவனிடம் இரண்டு ஓலைகளை கொடுத்தனுப்பி, அதில் ஒன்றை தனது தந்தை சுந்தர சோழனிடமும், மற்றொன்றை தங்கை குந்தவையிடமும் ஒப்படைக்குமாறு ஆணையிடுகிறார். ஆதித்த கரிகாலனின் ஆணையை ஏற்று சோழநாடு செல்லும் வந்தியத்தேவன் அங்கு நடக்கும் சூழ்ச்சியை அறிந்துகொண்டு, அரசனிடமும், இளவரசியிடமும் உண்மையைச் சொல்ல இறுதியில் எதிராளிகளின் சூழ்ச்சி கைகூடியதா, இல்லையா என்பதுடன் வந்தியத்தேவனின் பயணத்தில் நடக்கும் பிரச்சினைகளின் தொகுப்பு தான் 'பொன்னியின் செல்வன் 1'.


பலரும் படமாக்க முயன்ற கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை திரையாக்கம் செய்துகாட்டியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவருடன், இளங்கே குமரவேலும், ஜெயமோகனும் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். கல்கி தன்னுடைய கற்பனை வளத்தை எழுத்துகளில் நுழைத்து நாவலை படிக்கும் வாசர்களின் மன ஓட்டத்தில் பிரமாண்ட காட்சிகளை அரங்கேற்றியிருப்பார். வந்தியத்தேவனின் பாதைகளை அவர் விவரிக்கும்போது நாமும் வந்தியத்தேவனின் பின்னால் அமர்ந்து செல்லும் உணர்வை நாவல் கொடுக்கும். அப்படியான அந்த எழுத்துகளுக்கு திரைவடிவம் கொடுக்க தன்னால் முடிந்த அளவுக்கு முயன்றியிருக்கிறார் மணிரத்னம். அவை சில இடங்களில் கைகொடுத்தும், சில இடங்களில் இடறியுமிருக்கிறது.


நாவலை வாசித்தவர்கள் கட்டமைத்திருக்கும் கற்பனை உலகை எட்ட நினைத்திருக்கும் இயக்குநர் மற்றும் படக்குழுவின் முயற்சி மெச்சத்தக்கது. ஆனால், வாசிக்காதவர்களுக்கு கதையும், மாந்தர்களும் புதிது எனும்போது, அவர்களுக்கான டீடெய்லிங் மிஸ்ஸிங். அதேபோல நாவலை அப்படியே படமாக்காமல், படத்தின் கால அளவிற்கேற்ப பல இடங்கள் கத்தரிக்கப்பட்டு சுருக்கப்பட்டுள்ளன.

படத்தின் பலமே அதன் தேர்ந்த நடிகர்கள் கூட்டம்தான். ஆதித்த கரிகாலனாக விக்ரம். நந்தினியை நினைத்து உருகும் காட்சிகளிலும், களத்தில் புழுதிபறக்க எதிரிகளை களமாடும் காட்சிகளிலும் ஆதித்த கரிகாலனுக்கான உருவமாக காட்சியளிக்கிறார். இடத்திற்கேற்ப தன்னை தகவமைத்து, சாமர்த்திய வீரனாக வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் கார்த்தி. ஆழ்வார்கடியானான ஜெயராமுடன் அவரது கெமிஸ்ட்ரி நன்றாகவே கைகொடுத்துள்ளது. அமைதியாய் செல்லும் காட்சிகளில் தன்னுடைய ஒன்லைனர்களால் சிரிக்கவும் வைக்கிறார்.

இளமை தளும்பும், இளைய இளவரசனாக ஜெயம் ரவி ரசிக்க வைக்கிறார். ஐஸ்வர்யா ராய், த்ரிஷா தெளிந்த நீரோடைப்போல திரைக்கு அழகூட்டி கல்கியின் வர்ண்ணைகளுக்கு நியாயம் சேர்க்கின்றனர். அதிலும் குறிப்பாக, இரண்டு பேரும் எதிரெதிராக சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் சிலிர்ப்பு.


ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் பூங்குழலி நடுக்கடலில் கப்பலுக்குள் மிதக்கும் மீனாக ஈர உடையுடன் ஈர்க்கிறார். ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்திருக்கும் ஜெயராம் தலைமுடி ஸ்டைல், நடை, உடை, உடல்மொழி என மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தவிர பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், பிரபு, ரஹ்மான், நிழல்கள் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், கிஷோர் தேர்ந்த நடிப்பில் கவனம் பெறுகின்றனர்.

'கருவூலத்தை பார்த்து மயங்கிட வேண்டாம்' என ஐஸ்வர்யா ராய் சொல்லும்போது, 'வைர சுரங்கத்தையே பார்க்கிறேன்' என மறுமொழியுதிர்க்கும் வசனம் டச். ஆதித்த கரிகாலன் - நந்தினிக்கான குட்டி ஃப்ளாஷ்பேக் ஈர்ப்பு. இரண்டாம் பாதியில் கப்பலில் நடக்கும் சண்டைக் காட்சிகள், போர்க் காட்சிகள், தோட்டாதரணியின் கலை ஆக்கம் படத்தின் தரத்தை கூட்டுகின்றன. ரவி வர்மனின் ஒளிப்பதிவில் பிரமாண்ட காட்சி அனுபவம் கண்களுக்கு விருந்து. குறிப்பாக விக்ரம் ஐஸ்வர்யா ராய் குறித்து சிலாகிக்கும் காட்சிகளில் நிலையில்லாமல் முகத்துக்கேற்றபடி நகரும் கேமராவும் அது உருவாக்கும் அனுபவமும் புதுமை.

ஐஸ்வர்யாராய்க்கு, த்ரிஷாவுக்கான தனித்தனி பிரத்யேக பிண்ணனி இசையை கோர்த்ததன் வழியே அந்தக் கதாபாத்திரங்களுக்கான மூட்-ஐ உருவாக்கி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். 'பொன்னிநதி', 'சோழா சோழா' இறுதியில் வரும் மனதை உருக்கும் பாடல் மற்றும் பிண்ணனி இசையில் படத்துக்கு ஆன்மாவை அச்சுபிசகமால் பார்வையாளர்களுக்கு கடத்துகிறார்.

மொத்தத்தில் நிதானமாக நகரும் திரைக்கதை, சில இடங்களில் பிசகும் சிஜி, நாவல் வாசிக்காதவர்களுக்கான முழுமையில்லாத காட்சிகள் என சில குறைகள் இருந்தாலும், ரசிகர்களுக்கு காட்சி அனுபவ விருந்து படைக்கிறது பொன்னியின் செல்வன்.


 PONNIYINSELVAN

Cinewoods RATING :4/5 

About Cinewoods

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Comments:

Post a Comment